ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்த பிரசாந்த் கிஷோர்
பாட்னா
பீகார் மாநில தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் முதல்வர் நிதிஷ்குமார் முன்னிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்துள்ளார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் தேர்தலில் வெற்றி பெற கட்சிகளுக்கு பல திட்டங்களை வகுத்து கொடுப்பதிலும் பிரசார ஒருங்கிணைப்பிலும் புகழ் பெற்றவர் ஆவார். இவரை இந்த கலையில் ஒரு சாம்பியன் என தேர்தல் நோக்கர்கள் புகழ்வது வழக்கம். கடந்த 2012 ஆம் ஆண்டு குஜராத்திலும், 2014 ஆம் ஆண்டு மத்தியிலும் மோடிக்கு இவர் மிகவும் உதவினார்.
அதன் பிறகு பிரசாந்த் கிஷோர் உதவியுடன் பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சியை பிடித்தார். யானைக்கும் அடி சறுக்கும் என்னும் பழமொழிக்கிணங்க இவர் வியூகம் உ.பி. தேர்தலில் தோல்வி அடைந்தது. அதன் பிறகு இவர் சிறிது நாள் அரசியல் உலகில் அமைதியாக இருந்தார். தற்போது மீண்டும் அரசியல் பிரவேசம் செய்துள்ளார்.
இம்முறை அவர் ஜனதா தளம் கட்சியில் அக்கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் முன்னிலையில் இணைந்துள்ளார். நிதீஷ்குமார் பிரசாந்த் கிஷோரை தமது கட்சியின் எதிர்காலம் என புகழ் மாலை சூட்டி உள்ளார். அத்துடன் ஜீன்ஸ் உடையில் மாடர்னாக வரும் பிரசாந்த் கிஷோர் அரசியல்வாதி போல் உடை அணிய வேண்டும் என அறிவுரையை நிதிஷ்குமார் கூறி உள்ளார்.