டில்லி:

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்கத்திற்கும், தன்னாட்சி அதிகாரம் கொண்ட பிரச்சார் பாரதிக்கும் இடையே சில தினங்களாக மோதல் போக்கு நீடிக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் ஊழியர்களுக்கான சம்பள நிதியை அமைச்சகம் நிறுத்தி வைத்திருப்பதாக பிரச்சார் பாரதி தலைவர் சூர்ய பிரகாஷ் குற்றம்சாட்டியிருந்தார். புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்க வேண்டியிருப்பதால் கால தாமதம் ஏற்படுவதாக அமைச்சகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இது உண்மையான காரணமல்ல என்ற கருத்து எழுந்துள்ளது.

இந்நிலையில் சூர்ய பிரகாஷ் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில், ‘‘ ஜனநாயக அமைப்பில் ஒரு அமைச்சகத்திற்கும், தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புக்கும் இடையே கருத்து மோதல் வருவது இயல்பு தான். அமைச்சகத்தில் உள்ள அதிகாரிகள் சிலர் பிரச்சார் பாரதி சட்டத்தை அவமதிக்கும் வகையில் சில உத்தரவுகளை பிறப்பித்தனர். இது சட்டத்தில் இல்லாதவையாகும். இது போல் வேறு எந்த சட்டமும் அவமதிக்க்பட்டதாக தெரியவில்லை.

உதாரணமாக பிரச்சார் பாரதி சிஇஓ.வின் ஆண்டு செயல்பாட்டு மதிப்பீடு அறிக்கையை தகவல் ஒளிபரப்பு துறை செயலாளர் தயாரித்தளிக்க வேண்டும் என்று அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது முழுக்க முழுக்க சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். சிஇஓ பிரச்சார் பாரதியின் ஊழியர். அவர் அமைச்சக ஊழியர் கிடையாது. அமைச்சகம் மற்றும் அதன் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் சிஇஓ கண்டிப்பாக செயல்படக் கூடாது என்பது சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘கடந்த மாதம் 5ம் தேதி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நீக்கம் செய்ய பிரச்சார் பாரதிக்கு உத்தரவிடப்பட்டது. தனது சொந்த நிதியில் இருந்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பிரச்சார் பாரதி சம்பளம் வழங்கி வரும் நிலையில் இத்தகைய உத்தரவு சட்டத்துக்கு எதிரானது. நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்திற்கு எதிராக சில அதிகாரிகள் செயல்படுகின்றனர்.

பிரச்சார் பாரதி சட்டப்படி துணை ஜனாதிபதி தலைமையிலான குழு தான் தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் கொண்டது. அதனால் எனது 2வது முறை பதவி நியமனத்துக்கு பின்னால் எவ்வித அந்தரங்க செயல்களும் இல்லை’’ என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், ‘‘பிரச்சார் பாரதிக்கு இந்த அரசு மதிப்பு அளிக்கிறது. நான் இந்த அரசின் நண்பராக இருப்பதற்கு 2 காரணங்கள் உள்ளது. ஒன்று கருத்தியல் உறவு. 2வது மூத்த அதிகாரிகள், கட்சியினரிடம் அரசியல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடிவது தான் இதற்கு காரணம்.

போலி மதசார்பிண்மை தான் பல பிரச்னைகளுக்கு அடிப்படையாக உள்ளது என்பது எனது கருத்து. இதில் இருந்து வெளியே செல்லும் நோக்கம் இந்த அரசிடம் இருப்பதை பார்க்கிறேன்’’ என்றார் சூர்ய பிரகாஷ்.