ரூ.1 அபராதம் விதிப்பு: தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பிரசாந்த் பூஷண் மனு தாக்கல்…

--

டெல்லி: தலைமை நீதிபதியை விமர்சித்த வழக்கில், தனக்கு ரூ.1 அபராதம் விதிக்கப்பட்ட  தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி  வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பிரபல வழக்கறிஞர் பிரசாந்த பூஷன், கடந்தசில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற தலைம நீதிபதி குறித்து விமர்சனம் செய்திருந்தார்.  தலைமை நீதிபதி எஸ். ஏ பாப்டே, ஒரு வெளிநாட்டு  இருசக்கர சொகுசு வாகனத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில்,  அதுதொடர்பாக தனது கருத்தை பதிவிட்டிருந்தார். அதில், தலைமை நீதிபதியே சட்டத்தை மதிக்கவில்லை என்றும், இருச்சக்கர வாகனத்தை இயக்கும்போது,  ஹெல்மெட் அணியாதது குறித்தும், முகக்கவசம் அணியாதது குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இது சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து,  உச்சநீதிமன்றம் பிரசாந்த் பூஷண் மீது தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. விசாரணையின்போது, தனது கருத்துக்கு பிரசாந்த் பூஷண் மன்னிப்பு கோரி உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர் மன்னிப்பு கோர முடியாது என திட்டவட்டமாக அறிவித்து விட்டதால், அவருக்கு  ரூ.1 அபராதம் விதிப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.  மேலும், அபராத தொகையைன ரூ.1ஐ செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் செலுத்த தவறினால் 3 மாதம் சிறை தண்டனை மற்றும் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றவும் தடை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இதன் பின்னர் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார். அவரது பதிவில், நீதிமன்ற தீர்ப்பையடுத்து தனது மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவான் பங்களிப்புடன் ஒரு ரூபாய் பெற்றுக்கொண்டதாக பதிவிட்டார். இதனையடுத்து உச்சநீதிமன்றம் விதித்த ஒரு ரூபாய் அபராதத்தை  செலுத்தினார் பிரஷாந்த் பூஷன். அத்துடன் இந்த விவகாரம் முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது.

இந்த நிலையில், தனக்கு அபராதம் விதித்த  உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக,  மறுஆய்வு மனு  தாக்கல் செய்துள்ளார் பிரசாந்த் பூஷண். இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.