பிரசாந்த் பூஷன் மீதான 2009ம் ஆண்டு அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் வேறொரு அமர்வுக்கு மாற்றம்

டெல்லி: பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீதான 2009ம் ஆண்டு அவமதிப்பு வழக்கானது வேறொரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

சமூக ஆர்வலரும், உச்ச நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் மீது 2 அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று 2009ம் ஆண்டில் தொடுக்கப்பட்டது. அப்போது தெகல்கா பத்திரிகைக்கு பிரசாந்த் பூஷன் ஒரு பேட்டி கொடுத்து இருந்தார்.

உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தலைமை நீதிபதிகளின் ஊழல்கள் குறித்து அவர் குற்றம்சாட்டி இருந்தார். அந்த சமயத்தில் வழக்கறிஞரான ஹரீஷ் சால்வே, உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல, பிரசாந்த் பூஷன் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற்ததில் இன்று அதே நீதிபதிகள் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது பிரசாந்த் பூஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: வழக்கில் பல சட்ட நுணுக்கங்கள் அலசி ஆராய வேண்டும்.

ஆகவே, அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதை நீதிபதி அருண் மிஸ்ரா ஏற்கவில்லை. தான் செப்.2ம் தேதி ஓய்வு பெற உள்ளதால், வேறொரு அமர்வுக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைத்து விசாரணையை செப்.10ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக கூறினார்.