பாட்னா

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை விட அதிக தொகுதிகளைப் பெற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்தது.  அப்போது ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.  இதில் ஐக்கிய ஜனதா தளம் 71 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 80 இடங்களிலும் காங்கிரஸ் 27 இடங்களிலும் வென்றன.  அதே வேளையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 58 இடங்களில் மட்டுமே வென்றது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதீஷ்குமார் பீகார் மாநில முதல்வராகப் பதவி ஏற்றார்.  ஆயினும் அந்த கூட்டணி முறிவால் நிதீஷ்குமார் ராஜினாமா செய்ய நேரிட்டது.  அவருடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி இணைந்ததால் மீண்டும் நிதீஷ்குமார் முதல்வரானார்.  வரும் 2020 ஆம் ஆண்டில் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் பாஜகவை விட அதிக இடங்களில் போட்டியிட அக்கட்சி விரும்புவதாகக் கூறப்படுகிறது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத்தலைவரும் பிரபல தேர்தல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர், ”ஐஜத வுக்கு அதிக இடங்கள் கேட்டுப் பெற வேண்டிய தேவை இல்லை, இங்கு ஐ ஜ த ஆட்சி செய்து வருகிறது.  பாஜக வெறும் ஆதரவு மட்டுமே அளிக்கிறது.  எனவே தற்போது தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தால் கடந்த 2009 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நடந்தது போல் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு தேர்தலில் ஐ ஜ த 142 இடங்களிலும் பாஜக 101 இடங்களிலும் போட்டி இட்டன.   தற்போது மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த சிவசேனா கட்சி கூட்டணியை முறித்துக் கொண்டு எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை பிடித்தது.  இதனால் பாஜக பீகார் மாநிலத்தில் கவனமாக இருக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது.  அதன் அடிப்படையில் சமீபத்தில் அமித் ஷா பீகார் மாநிலத்தில் பாஜக 50% தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகத் தெரிவித்தார்.

ஆனால் பாஜகவை விட அதிக தொகுதிகளைப் பெற ஐ ஜ த கட்சி தனது துணைத் தலைவரும் தேர்தல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் மூலம் முயற்சி செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது.   எனவே பாஜக பலவீனமாக உள்ளதாகக் காட்ட பிரசாந்த் கிஷோர் தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை சட்டத் திருத்தம் போன்றவற்றில் பாஜகவுக்கு எதிர்க்கருத்து தெரிவிப்பதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.