அமித் ஷா சொல்லி கட்சியில் சேர்த்ததாக சொல்வது பொய்: நிதிஷ்குமாருக்கு, பிரஷாந்த் கிஷோர் பதிலடி

பாட்னா: அமித் ஷா சொல்லித் தான் என்னை கட்சியில் சேர்த்ததாக சொன்ன பொய்யை யாரும் நம்ப மாட்டார்கள் என்று நிதிஷ்குமாருக்கு, பிரஷாந்த் கிஷோர் பதிலடி கொடுத்துள்ளார்.

நாட்டின் பிரபல தேர்தல் உத்தியாளர் என்ற பெயரை பெற்றவர் பிரஷாந்த் கிஷோர். 2014ல் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைய இவரின் செயல்திட்டம் தான் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் உத்திகளை வகுத்து தந்தவர். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவராகவும் அவர் இருந்து வருகிறார்.

அந்த கட்சி, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் சிஏஏ, என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிராக பேசி வருபவர்.  அதனால் முதலமைச்சர் நிதிஷ் குமாரை நெருக்கடிக்கு ஆளாக்கினார்.

இந் நிலையில் பிரஷாந்த் கிஷோரின் செயல்பாடுகள் குறித்து நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், தேர்தல் உத்தியாளராக சில கட்சிகளுக்கு பணியாற்றி வருகிறார். கட்சியில் நீடிக்க வேண்டுமென்றால் அடிப்படை விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் அவர் எப்படி இணைந்தார் என்று தெரியுமா? அமித்ஷா கேட்டுக்கொண்டதால் அவர் கட்சியில் சேர்க்கப்பட்டார். அவர் கட்சியில் இருப்பதென்றால் இருக்கட்டும், இல்லை விலகவேண்டுமென்றாலும் விலகி செல்லட்டும் என்றார்.

அவரின் இந்த பேட்டிக்கு காரசாரமாக பதிலடி தந்திருக்கிறார் பிரஷாந்த் கிஷோர். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

என்னை ஐக்கிய ஜனதா தளத்தில் எப்படி சேர வைத்தீர்கள் என்று பொய் சொல்லி இருக்கிறீர்கள். என்னை போலவே நீங்கள் மாற நினைத்த உங்க முயற்சி ஒரு மோசமான தோல்வி.

அமித் ஷா சொல்லித் தான் நீங்கள் என்னை கட்சியில் சேர்த்தது உண்மை என்றால் அவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒருவரின் பேச்சைக் கேட்காத தைரியம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது? இதை யார் நம்புவார்கள்? என்று பதிலடி தந்திருக்கிறார்.