இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளருக்கான போட்டியில் பிரவீன் ஆம்ரே!

புதுடெல்லி: இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், டெல்லி கேபிடல்ஸ் தற்போதைய ஆலோசகருமான பிரவீன் ஆம்ரே, இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கான போட்டியில் உள்ளார்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இந்திய அணியில் தலைமைப் பயிற்சியாளர் உட்பட பல்வேறு பயிற்சியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பம் செய்த ஜுலை 30ம் தேதிதான் கடைசி நாள்.

இந்நிலையில், இப்பதவிக்காக இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் பிரவீன் ஆம்ரேவும் விண்ணப்பித்துள்ளார். தற்போது 50 வயதாகும் இவர், டர்பனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்காக மொத்தம் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 1 சதம் மற்றும் 3 அரைசதங்களோடு மொத்தம் 425 ரன்களை அடித்தவர். மேலும், 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 2 அரைசதங்களுடன் மொத்தம் 513 ரன்களை அடித்தவர்.

இவர் மும்பை அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு, அந்த அணி ரஞ்சிக் கோப்பையை வெல்வதற்கும் காரணமாக இருந்தவர். தற்போது அமெரிக்க கிரிக்கெட்டில் பேட்டிங் ஆலோசகராக உள்ளார்.