மொரெனா. மத்தியப் பிரதேசம்

வியாபம் நுழைவுத் தேர்வு ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரான பிரவின் யாதவ் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

மத்தியப்பிரதேசத்தில் மருத்துவ கல்லூரி சேர்க்கை, அரசு ஊழியர் சேர்க்கை போன்ற பலவற்றுக்கும் வியாபம் மூலம் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டன.  இந்தத் தேர்வுகளை 3 கோடியே 20 லட்சம் பேருக்கு மேல் எழுதினார்கள்.  இதில் முறைகேடுகள் 1990களில் நடந்ததாக கூறப்பட்டது. கடந்த 2000ல் புகார்கள் பதிவு செய்யப்பட்டன.  ஆயினும் 2009 வரை விசாராணையில் இருந்த இந்த புகார்களை ஆராய 2009 ஆம் வருடம் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.  அந்த கமிட்டியின் 2011ல் அளித்த அறிக்கைப்படி நூற்றுக்கும் மேற்பட்டோர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.  தற்போது பலர் ஜாமினில் உள்ளனர்.

அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரான பிரவின் யாதவ் என்பவர் ம. பி. யில் உள்ள மொரேனாவில் தனது இல்லத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இதுவரை இந்த வழக்கில் சம்பந்தப் பட்டவர்களில் 40க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர்.  இவ்வாறு மரணமடைந்தவர்களில், குற்றம் சாட்டப்பட்டோர், சாட்சிகள், இதை புலனாய்ந்த செய்தியாளர் ஆகியோரும் அடங்குவோர்.  இவற்றில் பெரும்பாலோனோர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர்.  மரணம் அடைந்தவர்களில் ஜபல்பூர் மருத்தவக் கல்லூரி டீன் டாக்டர் அருண் சர்மா, மற்றும் இந்த ஊழலை வெளிக் கொணர்ந்த ஆஜ்தக் செய்தியாளர் அக்‌ஷய் சிங் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.