முன்கூட்டியே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் கொரோனா தொற்று குறைவு: அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: கொரோனா பரவுவதை தடுக்க முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்ட செயல்திறன் மிக்க நடவடிக்கைகள் காரணம் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

உலக ஹெப்படைடிஸ் தினத்தை முன்னிட்டு 2-வது புரிதல் மின்னணு-மாநாடு நடைபெற்றது. மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது: இந்த ஆண்டு மாநாட்டின் மையக் கருத்து, கோவிட் காலகட்டத்தில் உங்களது கல்லீரலைப் பாதுகாப்பாக பராமரிப்பீர் என்பது, மிகவும் பொருத்தமானது.

பிரதமர் ஆலோசனையின் பேரில், முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்ட செயல்திறன் மிக்க நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடிந்துள்ளது. கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் 2 முதல் 3 சதவீதமாக உள்ளது. பெரும்பாலான பாதிப்புகள் முன் அறிகுறிகள் இல்லாதவை.

நீரிழிவு, உடல்பருமன், கல்லீரல் பாதிப்பு என இணைநோய்கள் உள்ளவர்களால் ஏற்படும் உயிரிழப்பு அபாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். ஹெபடைடிஸ் உலகளாவிய சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

ஹெபடைடிஸ் பி மற்றும் சி தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு, கல்லீரல் புற்றுநோய் மற்றும் நாள்பட்ட கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. நாள்பட்ட ஹெபடைடிஸ் பாதிப்பு உள்ளவர்களில் 80 சதவீதம் பேர், அந்த தொற்று உடலில் உள்ளதை அறியாமல் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.