முன் கூட்டியே பிறந்து பல நோய்கள் கண்டு மீண்ட குழந்தை

சென்னை

ட்டு மாதத்தில் பிறந்த குழந்தைக்கு மூளை, இதயம் மற்றும் நுரையீரல் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுகுழந்தை பிழைத்துள்ளது.

கட்டுமான நிறுவனத்தில் பணி புரியும் ரங்கநாதன் மற்றும் இல்லத்தரசியான அவர் மனைவி காயத்ரி ஆகியோருக்கு நேத்ரன் என்னும் ஒரு மகன் உள்ளார்.   காயத்ரி கர்ப்ப காலத்தில் செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவர் மகனுக்கு இதயத்தில் ஓட்டை இருப்பது கண்டறியப்பட்டது.    ஆயினும் மருத்துவர் ஆலோசனைப்படி மகப்பேற்றுக்கு காயத்ரி தயார் ஆனார்.  எட்டாம் மாத கர்ப்பத்தில் அவருக்கு உடல்நிலையில் மாறுதல் காணப்பட்டது.

அதையொட்டி அறுவை சிகிச்சை மூலம் காயத்ரி தனது மகன் நேத்ரனை பெற்றெடுத்தார்.   அந்த குழந்தை வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டான்.   ஒரு சில தினங்களில் அவன் சரியாகிவிடுவான் என மருத்துவர்கள் கூறியதற்கு மாறாக அவனுக்கு நுரையீரல் போதுமான வளர்ச்சி இல்லாததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.  அத்துடன் குழந்தைக்குத் தொற்று அபாயம் இருந்ததால் வீரியமுள்ள அண்டிபயாடிக்ஸ் செலுத்தப்பட்டது.

அப்போது குழந்தையின் ஈரலில் வீரியமுள்ள ஆண்டிபயாடிக்ஸ் காரணமாகத் தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்ட மருத்துவர்கள் மாற்று சிகிசை அளித்தனர்.  அதன் பிறகு அவன் பிறந்து ஆறாம் வாரம்  ஈரலில் ஒரு கட்டி உருவானது ஸ்கேன் மூலம் தெரிய வந்தது.   இது மிகவும் கடுமையாக இருந்ததால் குழந்தை மரணம் அடையும் என மருத்துவர்கள் அஞ்சினர்.    ஆனால் கீமோதெரபி சிகிச்சை மூலம் கட்டி கரைக்கப்பட்டது.

இருதயத்தில் உள்ள ஓட்டையைச் சரி செய்ய அறுவை சிகிச்சை செய்யத் தீர்மானித்த நேரத்தில் நேத்ரன் மூளையில் பாதிப்பு காரணமாக அவன் தலை ஒரு கூம்பு போல ஆகி விட்டது.  இதனால் குழந்தையின் மூளையில் கடும் அழுத்தம் உண்டானது.   அதை சரி செய்ய முயன்ற மருத்துவர்கள் வெற்றி அடைந்தனர்.  அதன் பிறகு அறுவை சிகிச்சை மூலம் இருதயம் சீரானது.

இந்த சிகிச்சைகளுக்கு ஏராளமான பணம் செலவாகி உள்ளது.  ஆனால் ரங்கநாதனின் நிறுவன காப்பீடு மூலம் அவருக்குச் செலவுகளைச் சமாளிக்க முடித்தது.  தற்போது நேத்ரனின் உடலில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.   தற்போது சுமார் 8.5 மாதங்கள் ஆகும் நேத்ரன் மருத்துவமனையில் இருந்து நல்ல உடல்நலத்துடன் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளான்.  மருத்துவர்கள் அவன் உடல்நிலை தேறியதில் மகிழ்ச்சி அடைந்த போதிலும் அவனைப் பிரிவதில் மனத்துயரம் கொண்டுள்ளனர்.