புதிய புயல் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது! ஆர்.பி.உதயகுமார்

சென்னை: புதிய புயல் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வருவாய்த்துறை,  பேரிடர்மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்ச அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

முன்னதாக  வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல் தொடர்பாக அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக  சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் மழை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தென் கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, கன்னியாகுமரியில் இருந்து கிழக்கே 930 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது, இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறும் என்றும் முதலில் மேற்கு வடமேற்காக நகர்ந்து நாளை (2ம் தேதி) மாலை அல்லது இரவில் மேற்கு நோக்கி நகர்ந்து 3ம் தேதி டிசம்பர் காலை குமரிக்கடல் பகுதிக்கு வரும். இதன் காரணமாக, இன்று இராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் மற்றும் இதர தமிழக மாவட்டங்களிலும் வட தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக் கூடும்.

நாளை (2 ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (3 ந் தேதி) கன்னியகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் ஒரிரு இடங்களில் அதீத கனமழை பெய்ய கூடும் என்றும், மேலும் தென் மற்றும் வட தமிழகத்தில் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய கூடும்.

4 ந் தேதி இராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இதர பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தலைமைச் செயலர், வருவாய் நிருவாக ஆணையர் ஆணையின்படி, துணை ஆட்சியர் தலைமையில் பல்துறை அலுவலர்களுடன் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதுடன் நிலைமை தொடந்து கண்காணிக்கப்பட்டு மாவட்ட அளவில் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அலுவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் TNSMART செயலி மற்றும் சமூக ஊடகமான டிவிட்டர் மூலமும் புயல் தொடர்பான எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் புயல் கடக்க உள்ள மாவட்டங்களில் உள்ள ஏரிகளின் நீர் இருப்பு விபரம் ஏற்கனவே தினமும் tnsmart செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த செயலியின் மூலம் முன்கூட்டியயே வானிலை அறிக்கையின் அடிப்படையில் எந்தெந்த பகுதிகளில் மழைப்பொழிவு ஏற்படும் என்றும், அந்தப் பகுதிகளில், அதீத கனமழை அல்லது மிக கன மழை என்ற அளவில் மழைப் பொழிவு ஏற்பட்டால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதை முன் கூட்டியே கணித்து தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களுக்கு நேற்று முதல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், இத்தகைய தகவல்கள் உடனுக்குடன் மாவட்ட ஆட்சியர்களுக்கு தொடர்ந்து அளிக்கப்படும். இதன் காரணமாக, பொது மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம், முன் கூட்டியே நிவாரண மையங்களுக்கு பாதுகாப்பாக அழைத்து சென்று தங்க வைக்க இயலும்.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு, முன் எச்சரிக்கை செய்திகளை முன் கூட்டியே தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீனவர்கள் தொலைத்தொடர்பு சாதனங்களை முறையாக பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். நேற்றைய (30 ந் தேதி) நிலவரப்படி, தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 491 இயந்திர படகுகளும் 35 ஆழ்கடல் மீன்பிடி படகுகளும், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து 172 ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளன.

கர்நாடகா கடற்கரை எல்லையில் 28 படகுகளும், லட்சத்தீவு கடற்பரப்பில் 35 படகுகளும், கோவா கடற்பரப்பில் 33 படகுகளும், கொல்லம் கடற்பரப்பில் 44 படகுகளும், இரத்தினகிரி கடற்பரப்பில் 18 படகுகளும், மங்களூர் கடற்பரப்பில் 10 படகுகளும், மும்பைக்கு கடற்பரப்பில் 10 படகுகளும், தூத்துக்குடி கடற்பரப்பில் 29 படகுகளும் உள்ளன.

அனைத்து ஆழ்கடல் மீன்பிடிவர்களுக்கும் செயற்கைகோள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழக படகுகள் பாதுகாப்பாக கரை ஒதுங்க அனுமதிக்கும்படி கர்நாடகம், கேரளா, கோவா மாநிலங்கள் மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேச மீன்வளத்துறைகளுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக படகுகள் பாதுகாப்பாக கரை ஒதுங்க உதவிடும் பொருட்டு அதிகாரிகள் குழுக்கள் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழக ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மற்றும் அவர்கள் மீன்பிடிக்கக் கூடிய பகுதிகளின் புவியியல் குறியீடு ஆகிய விவரங்களை கப்பல்படை மற்றும் கடலோர காவல் படைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 14144 பாசன ஏரிகளில், 2692 ஏரிகள் 100 விழுக்காடு கொள்ளளவை எட்டியுள்ளன. கடலோர மாவட்டங்களில் உள்ள 7378 ஏரிகளில், 1579 ஏரிகள் 100 விழுக்காடு கொள்ளளவை எட்டியுள்ளன. இதுவன்றி, தென் மாவட்டங்களான, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 7605 ஏரிகளில், 979 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.

நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழை தொடர்பாக அடிக்கடி தொடர்ந்து அறிவிப்புக்களை அரசு வெளியிட்டு வருகிறது. ஆனால் மழை தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம். மாற்று கருத்து உள்ளவர்கள், மாற்று கொள்கை கொண்டவர்கள், எதிர்கட்சிகள் சமூக வலைதளங்களில் அச்சுறுத்தலை எற்படுத்தும் வகையில் செய்திகளை பரப்பி வருவதாக தகவல்கள் கிடைக்கின்றன.

மக்கள் அச்சப்படுத்தும் வகையில் இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்கட்சிகள் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற அவதூறு செய்திகளை பரப்பி வருபவர்கள் எச்சரிக்கை விடுக்கிறேன். அரசின் மூலம் வழங்கப்படும் அதிகாரபூர்வ அறிவுரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் பொதுமக்களை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.