“ஆனாலும் பஞ்சாப் வீரர்கள் இப்படியெல்லாம் செய்யக்கூடாது” – நைசாக வாரும் பிரீத்தி ஜிந்தா!

ஷார்ஜா: பஞ்சாப் வீரர்கள் ஆடும் போட்டி இதயம் பலவீனமானவர்களுக்கானதல்ல என்று தனது அணியை மறைமுகமாக வாரியுள்ளார் அந்த அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான நடிகை பிரீத்தி ஜிந்தா.

பெங்களூரு அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில், எளிதாக வெற்றிபெற வாய்ப்பிருந்தும், கடைசிப் பந்தில்தான் சிக்ஸர் மூலம் வென்றது பஞ்சாப் அணி. இல்லையெனில் போட்டி சமன் ஆகி, சூப்பர் ஓவர் சென்றிருக்கலாம்.

கடைசிப் பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில், நிக்கோலஸ் பூரான் சிக்ஸ்ர் அடித்து வெற்றியை தந்தார். இதுகுறித்து பிரீத்தி ஜிந்தா கூறியிருப்பதாவது, “மிகவும் தேவையான வெற்றியை பெற்றுள்ளோம். இப்படியான முறையில் விளையாடி, எங்கள் அணியினர் மக்களுக்கு ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தக்கூடாது என்று விரும்புகிறேன்.

பஞ்சாப் சிங்கங்கள் ஆடும் போட்டிகள் இதயம் பலவீனமானவர்களுக்கானதல்ல என்று எச்சரிக்கிறேன். அதேசமயம், இப்போட்டியில் இறுதிவரை நம்பிக்கையை தளரவிடாத பெங்களூரு பந்து வீச்சாளர்களுக்கு எனது பாராட்டுகள்” என்றுள்ளார் ஜிந்தா.