”எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணிற்கு டிச.18ம் தேதி கூட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது” – எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையம் விளக்கம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக மாநில எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு டிசம்பர் 18ம் தேதியே கூட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிக்கப்பட்டுள்ளது.

hiv

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அவரின் உடல்நிலை மோசமாக இருந்ததன் காரணமாக மருத்துவர்கள் ரத்தம் ஏற்ற அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி அரசு மருத்துவமனையில் அந்த பெண்ணிற்கு ரத்தம் ஏற்றப்பட்டது.

சில நாட்களில் அந்த பெண்ணிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, பரிசோதனை செய்யப்படதில் அந்த பெண்ணிற்கு ஹெச்.ஐ.வி. நோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் ரத்தம் ஏற்றப்பட்டதால் அந்த பெண்ணிற்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது உறுதியானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண்ணிற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த கர்ப்பிணி பெண்ணும், அவரது கனவரும் சாத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் இது தொடர்பாக மாநில எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு டிசம்பர் 18ம் தேதியே கூட்டு சிகிச்சை அளிக்கபப்ட்டுள்ளது. குழந்தை பிரசவிக்கும் வரை பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த பெண்ணின் தகுதிக்கு ஏற்ப வேலை வழங்க நடவடிக்கை எடுக்கபப்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தை நலமாக பெற்றெடுப்பதை உறுதி செய்ய மாவட்ட இணை இயக்குநருக்கு அறிவுறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. விசாரணை குழுவின் அறிக்கைபடி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டடுள்ளது.