லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்ட அரசு மகளிர் மருத்துவமனைக்கு நிறைமாத கர்ப்பிணியை அவரது கணவர், குடும்பத்தினர் அழைத்து வந்தனர். பிரசவ வலியால் அந்த பெண் துடித்தார். ஆனால் டாக்டர்கள் அவரை மருத்துவமனையில் சேர்க்கவில்லை.

இதனால் பார்வையாளர்கள் பகுதியில் அந்த பெண்ணை குடும்பத்தினர் தங்க வைத்தனர். அங்கேயே அவருக்கு குழந்தை பிறந்து விட்டது. தகவலறிந்த டாக்டர்கள் விரைந்து வந்து சிகிச்சையளித்தனர். கர்ப்பிணியை மருத்துவமனையில் சேர்க்காதது குறித்து விசாரணை நடத்த மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் அமிதா கார்க் கூறுகையில்,‘‘ பிரசவத்திற்காக அழைத்து வரப்பட்ட பெண்ணின் உடல்நிலையை கருதி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி பரிந்துரை செய்யப்பட்டது. அதை ஏற்காமல் இரவு நேர தங்குமிடத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர்’’ என்று தெரிவித்துள்ளார்.