தலித்தை மணந்த முஸ்லிம் பெண் கர்ப்பவதி என்றும் பாராமல் உயிருடன் எரிப்பு

பிஜப்பூர், கர்நாடகா

ர்நாடகா மாநிலத்தில் 21 வயதான முஸ்லிம் கர்ப்பவதி பெண் ஒருவர், தலித்தை மணம் புரிந்தவர் என்பதற்காக, அவருடைய உறவினர்களால் உயிருடன் எரிக்கப்பட்டார்

பிஜப்பூர் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்த நிகழ்வு பற்றி போலீஸ் அதிகாரி பாட்டில் கூறியதாவது

குண்டககனலா என்னும் கிராமத்தில் 21 வயதான பானு பேகமும் 24 வயதான சாயாபன்னா ஷாரனப்பா கொன்னூர் என்னும் வாலிபரும், வசித்து வந்தனர்.  பானு பேகம் முஸ்லிம் பெண்.  சாயாபன்னா தலித் வகுப்பை சேர்ந்த இளைஞர்,   இருவரும் அவர்கள் வீட்டாருக்கு தெரியாமல் காதலித்து வந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதியன்று இதை அறிந்த பானு பேகத்தின் பெற்றோர், இருவரையும் அடித்து நொறுக்கினர்.   பிறகு இருவரையும் பானுவின் வீட்டார் காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றனர், தன் மகள் மைனர் என்றும், சாயாபன்னா மீது வழக்கு பதியுமாறும் வற்புறுத்தினர்.   ஆனால் விசாரணையில் பானு மைனர் அல்ல என தெரிய வந்ததால் வழக்கு பதியவில்லை.

பானுவும் சாயாபன்னாவும் யாரும் அறியாமல் கோவாவுக்கு ஓடிப் போய் திருமணம் செய்துக் கொண்டு வசித்து வந்தனர்.  பானுபேகம் கருவுற்றார்.   தங்களின் பெற்றோர் இனி தங்களை ஏற்றுக் கொள்வார்கள் என இருவரும் நம்பினார்கள்.

கடந்த வாரம் சனிக்கிழமை இருவரும் திரும்பி ஊருக்கு வந்தனர்.  ஆனால் இருவரின் பெற்றோர்களும் இவர்களின் திருமணத்தை ஏற்கவில்லை.   ஒரு நாள் முழுவதும் ஊரே கலவரமாக இருந்திருக்கிறது.

சாயாபன்னாவை தாறுமாறாக தாக்கி, பானுவை விட்டு விலகச் சொல்லி பானுவின் வீட்டார் வற்புறுத்தி இருக்கிறார்கள்.   உடலெங்கும் காயத்துடன் அக்கம் பக்கத்தினரின் உதவியை கேட்டு கதறிய சாயாபன்னாவை, பானுவின் தாயார் கற்களை வீசி அங்கிருந்து விரட்டி இருக்கிறார்.   உயிரைக் கையில் பிடித்து காவல் நிலையத்த்துக்கு சென்று கதறி,  காவலர்களுடன் ஊருக்கு திரும்பிய அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

அவர்கள் வரும் முன்பே பானுவை அவரது தந்தை, தாய், சகோதரன், சகோதரி ஆகியோர் உயிருடன் கொளுத்தி விட்டனர்.  இவர்கள் வரும் போது எரிந்துக் கொண்டிருந்த பானுவின் உடலை போராடி சாயாபன்னா  அணைத்தார்.   அவருக்கும் சிறு தீக்காயங்கள் ஏற்பட்டன.  ஆனால் அதற்குள் பானு இறந்து விட்டார்.

விசாரணையில் பானுவின் அண்டை வீட்டார், சாயபன்னாவின் வேண்டுதலை ஏற்காததோடு, பானு உயிருடன் எரிக்கப்படும் போது,  கதவை மூடிக்கொண்டு போய் விட்டனர் என்றும் காப்பாற்ற ,முன் வரவில்லை எனவும் தெரிய வந்தது.

பானுவின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், அவரை தீக்கிரையாக்கும் முன் பல இடங்களில் கத்தியால் குத்தப் பட்டிருக்கிறார் என தெரிய வந்துள்ளது

நேற்று, பானுசின் தாய், தந்தை, சகோதரர், சகோதரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களின் மேல் ஆளை தாக்குதல், கொலை ஆகிய குற்றங்கள் சாட்டப் பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நால்வரை தவிர பானுவின் இரு அண்ணன்கள், இரு அக்காக்கள் தலைமறைவாகி விட்டனர்