சென்னை: அதிமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டு முரண்டு பிடிக்கும் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, நாளை சசிகலாவை அவரது தி.நகர் இல்லத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளை ஒதுக்கக்கோரி முரண்டு பிடிக்கும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, அதிமுகவை மிரட்டும் நோக்கில், சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.  தற்போது சசிகலா தண்டனை முடிந்துவிடுதலையாகி, தி.நகரில் உள்ள கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருந்து, ரகசியமாக பலரை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, அதிமுகவுக்கு செக் வைக்கும் நோக்கில், பிரேமலதா தரப்பில் சிலரும், சசிகலாவை சந்தித்து பேசியதாக சமுக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இன்று தேமுதிகவின் கொடிநாளையொட்டி,  கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் கொடியேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா,  கூட்டணி பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும் என்று கூறியதுடன்,  கூட்டணி குறித்து இனி தேமுதிகவிடம் கேட்காதீர்கள். அதிமுகவிடம் கேளுங்கள் என்றும் காட்டமாக கூறினார். மேலும், இதுவரை சசிகலாவை சந்திக்கவில்லை என்றும், சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும்  தெரிவித்தார்.

இந்த நிலையில், பிரேமலதா, நாளை சசிகலாவை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலாவின் உடல்நலம் குறித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் தேமுதிகவுக்கு 41 இடங்களை ஒதுக்க மறுத்துவிட்ட நிலையில், அதிமுக தலைமையை மிரட்டும் நோக்கில் சசிகலாவை சந்திக்க பிரேமலதா திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.