சென்னை:

நேற்று செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த் மனைவி பிரேமலதா, அதிமுக எம்.பி.க்கள் வேஸ்ட் என்று பகிரங்கமாக கூறிய நிலையில், தேமுதிகவை அதிமுக கூட்டணியில் சேர்க்க அதிமுக எம்.பி.க்கள் உள்பட மூத்த நிர்வாகிகள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளிடமும் ஒரே நேரத்தில் தேமுதிக பேரம் பேசிய நிகழ்வு வெளியானதை தொடர்ந்து, கடும் ஆத்திரம் அடைந்த  தேமுதிக பொருளாளர் பிரேமலதா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுகவை கடுமையாக விமர்சித்த நிலையில்,  அதிமுகவையும் கடுமையாக சாடினார். இருந்தாலும் அவர்களுடன் கூட்டணி வைப்போம் என்றும் தெரிவித்தார்.

அவர் கூறும்போது,  தேமுதிக கூட்டணி சேர்ந்ததால் தான் அதிமுக ஆட்சியில் அமர முடிந்த தாகவும், அதிமுகவுன் 37  எம்.பி.க் களால் தமிழகத்திற்கு  எந்தவித பயனும் இல்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இது அதிமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏற்கனவே கூட்டணி தொடர் பாக தேமுதிகவின் நடவடிக்கைகள் பிடிக்காத நிலையில், ஒதுங்கி இருந்த அதிமுகவை, அமித்ஷா வலியுறுத்தியதை தொடர்ந்து, விஜயகாந்த்  உடல் நலம் விசாரிக்கும் சாக்கில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்  விஜயகாந்தை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசினார்.

ஆனால், தேமுதிக  7 லோக்சபா,  ஒரு ராஜ்யசபா, 2 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 50சி என பேரம் பேச, ஓபிஎஸ் நிலைகுலைந்து போனார். பின்னர், தேமுதிகவின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று கூறி, தொகுதிகள் குறைத்து பேசப்பட்டது. இதன் காரணமாக இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், நேற்றைய பிரேமலதாவின் பேட்டி அதிமுக மூத்த தலைவர்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவை கடுமையாக விமர்சித்த தேமுதிகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

தங்களை வேஸ்ட் என்று விமர்சித்த பிரேமலதாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று அதிமுக எம்.பி.க்கள் ஆத்திரத்துடன் உள்ளனர். இதுதொடர்பாக எம்.பி.க்கள் உள்பட  பெரும்பாலான அமைச்சர்கள் முதலமைச்சர், துணை முதலமைச்சரிடம் வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக,  தேமுதிகவுடன்  அதிமுக கூட்டணி ஏற்படுவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தவளை  தன் வாயால் கெடும் என்பதுபோல, பிரேமலதாவின் திமிர் பிடித்த பேச்சு, இன்று தேமுதிகவை அதலபாதாளத்தில் தள்ளி வருகிறது.