டில்லி:

ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர்  விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி, விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை செய்யலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து, 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், அந்தக் கடிதம் தொடர்பாக இதுவரை ஆளுநர் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் விளக்கமும் வழங்கப்படவில்லை.

7பேர் விடுதலையை வலியுறுத்தியும், இந்த விவகாரத்தில் ஆளுநர் விரைந்து முடிவு தெரிவிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதே கோரிக்கையை முன்வைத்து தமிழகத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.  பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து வலியிறுத்தி வந்த நிலையில், அவர்களின் ஆதரவோடு, தமிழகம் முழுவதும் மனிதசங்கிலி போராட்டத்தை  நடத்தினார்.

இந்த நிலையில்,  7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு முடிவெடுத்து, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியதை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  அமெரிக்கை நாராயணன், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம சுகந்தன் உள்பட குண்டுவெடிப்பில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினர் இணைந்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது,  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி செய்வதாக கூறியுள்ள உச்சநீதிமன்றம், இந்த விவகாரம்  தமிழக ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதால் விடுதலை குறித்து அவரே முடிவு எடுப்பார்  என்று உத்தரவிட்டு உள்ளது.