டெல்லி: கொரோனா தடுப்பூசிகளை வெளியிடும் பணிகளின் ஒரு பகுதியாக 4 மாநிலங்களில் ஒத்திகையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

அதன்படி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடவடிக்கையானது வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அசாம், ஆந்திரா, குஜராத், பஞ்சாப் ஆகிய 4  மாநிலங்களில் நடைபெறுகிறது.

இது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவுது: கொரோனா தடுப்பூசி அறிமுகம், தடுப்பூசி போடும் நிகழ்ச்சிகளை நடத்துதல், தகவல்தொழில் நுட்ப தளத்தை பயன்படுத்துதல், பணியாளர்களை நியமித்தல், உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை, தொற்றுத் தடுப்பு நெறிமுறைகள் உள்ளிட்ட போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

தேசிய அளவிலான பயிற்சியில், அதிகாரிகள் 2,360 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். தற்போது அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பயிற்சிகள் முடிவடைந்துள்ளன. அவற்றில் மாவட்ட அளவில் 7,000க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று உள்ளனர்.

லட்சத்தீவில் இந்த பயிற்சி டிசம்பர் 29ம் தேதி நடக்கிறது. 681 மாவட்டங்கள் (49,604 பயிற்சியாளர்கள்) செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் மருத்துவ அதிகாரிகளின் பயிற்சியை முடித்துள்ளன. 17,831 வட்டாரங்களில் 1399 வட்டாரங்களில், தடுப்பூசி போடும் குழுவினருக்கான பயிற்சிகள் முடிவடைந்துள்ளன. மற்ற வட்டாரங்களில் பயிற்சிகள் நடந்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.