லக்னோ:

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் தேர்தல் நிலைமை குறித்து விவாதித்தனர்.


உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், எதிர்கட்சிகள் 30 தொகுதிகளை கைப்பற்றுவர் என்றும், பாஜக குறைந்தது 40 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை, அவரது இல்லத்தில் சந்தித்து அகிலேஷ் யாதவ் ஆலோசனை நடத்தினார்.

நாங்கள் 56 தொகுதிகளில் வெல்வோம் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்த அகிலேஷ் யாதவ், மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மீண்டும் சந்தித்துப் பேசுவோம் என்று தெரிவித்தார்.

இரு தலைவர்களும் மே 24-ம் தேதி மற்ற எதிர்கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசுவார்கள் என்று தெரிகிறது. இதன்படி பார்த்தால், சோனியா காந்தி மே 23-ம் தேதி கூட்டியுள்ள எதிர்கட்சிகள் கூட்டத்தில் இருவரும் கலந்துகொள்ள மாட்டார்கள்.

சந்திப்பு தொடர்பாக இருவரும் மம்தா பானர்ஜி மற்றும் சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களிடம் தொலைபேசியில் பேசியுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகே, மாயாவதி அடுத்தக்கட்டமாக காய்களை நகர்த்துவார் என்று அவரது ஆலோசகர் சதீஷ் மிஷ்ரா தெரிவித்தார்.