நீண்டகால ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே..!

டோக்கியோ: நீண்டகாலம் ஜப்பான் பிரதமராக இருந்தவர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் அந்நாட்டின் தற்போதையப் பிரதமர் ஷின்ஸோ அபே.

ஜப்பானில் அரசக் குடும்பத்திற்கென தனி மரியாதை இருந்தாலும், அங்கும் நாடாளுமன்ற ஆட்சிமுறைதான். அங்கு தற்போது பிரதமராக இருக்கும் ஷின்ஸோ அபே, அப்பதவியில் அமர்ந்து நேற்றுடன் 2887 நாட்கள் நிறைவடைந்துவிட்டன.

இவருக்கு முன்னதாக இந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தவர் கடந்த 1901 முதல் 1913 வரை ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்த டாரோ கட்சுரா என்பவர். தற்போது அந்த சாதனை கைமாறியுள்ளது.

இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், முன்னேறிய ஜி7 நாடுகளின் குழுவில், அதிககாலம் ஒரு நாட்டின் தலைவராக கலந்துகொண்டவர்கள் வரிசையில் ஷின்ஸோ இரண்டாமிடம் பெற்றுள்ளார்.

இதில் முதலிடம் பெற்றவர் கடந்த 2005ம் ஆண்டு முதல் ஜெர்மன் சான்ஸலராகப் பதவி வகித்துவரும் ஏஞ்சலா மெர்கல். வரும் 2021ம் ஆண்டுவரை ஷின்ஸோ அபே ஜப்பான் பிரதமர் பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.