டில்லி

பிரதமரின் உள்நாட்டுப்பயணத்தின் போது அவருக்கு பூச்செண்டுகளுக்கு பதில் புத்தகங்கள் அல்லது கதர் துண்டுகள் பரிசளிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

பிரதமர் ஏற்கனவே தனக்கு பூச்செண்டுகளுக்கு பதில் புத்தகங்கள் பரிசளிக்குமாறு கேட்டுக் கொண்டது தெரிந்ததே.  மேலும் கதர் துணிகளையும் அளிப்பதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பளிக்க முடியும் எனவும் கூறி இருந்தார்.

மத்திய உள்துறை அமைச்சகம் அதைத் தொடர்ந்து ஒரு கடிதம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளது.  அதில் உள்நாட்டில் பிரதமர் வரும்போது அவரை பூச்செண்டு கொடுத்து வரவேற்பதற்கு பதில், புத்தகங்கள் மற்றும் கதர் துண்டுகள் தந்து வரவேற்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இதை தனது டிவிட்டர் பக்கத்திலும் மன் கி பாத் என்னும் ரேடியோ நிகழ்ச்சியிலும் மோடி தெரிவித்துள்ளார்.  சஷி தரூர் எம் பி யும் இதே கருத்து தனக்கும் உண்டு எனவுக் கூறி இருந்தார்.

”யாரை வரவேற்பதாக இருந்தாலும் கதர்துண்டை பரிசளிப்பது பல ஏழை நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.  நான் குஜராத் முதல்வராக இருந்த போது பூச்செண்டு கொடுத்து யாரையும் வரவேற்க மாட்டேன்.  புத்தகமோ கதர் துண்டோதான் தருவேன்.  நீங்கள் அளிக்கும் பூச்செண்டு ஒரே நாளில் வாடி விடும்.  ஆனால் புத்தகம் என்றும் அறிவை வளர்க்கும்.  நாம் அளிக்கும் பரிசை பெறுபவர் அதை உபயோகிக்க வேண்டும்.  நான் இங்கிலாந்து அரசியை சந்தித்த போது அவர் என்னிடம் ஒரு கதர் துண்டை காட்டினார்.  அது அவருக்கு மகாத்மா காந்தி திருமணப் பரிசாக அளித்தது என நெகிழ்ச்சியுடன் கூறினார். நான் மெய் சிலிர்த்துப் போனேன் “ என மோடி கூறுகிறார்