இது மிகவும் கவலை தரக்கூடிய பொருளாதார மந்தநிலை: ரகுராம் ராஜன்

சிகாகோ: இந்தியாவில் தற்போது நிலவிவரும் பொருளாதார மந்தநிலையானது மிகவும் கவலை தரக்கூடியதாக உள்ளதென்று கூறியுள்ளார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்.

அவர் கூறியிருப்பதாவது, “இந்தியாவில் தற்போது நிலவிவரும் பொருளாதார மந்த நிலையானது மிகவும் கவலை தரக்கூடிய ஒன்றாகும். எனவே, இதை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக அரசால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தனியார்துறை முதலீடுகள் அதிகரிக்கும் வகையில் தேவையான மற்றும் முறையான ஊக்கமளிக்கப்பட வேண்டும். புதிய சீர்திருத்த திட்டங்களை உருவாக்க தீர்மானிக்க வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி விகித மதிப்பீட்டில் பல தனியார் அமைப்புகள் ஈடுபடுகின்றன. ஆனால், அவற்றின் கணிப்புகள், அரசின் வளர்ச்சி மதிப்பீட்டு அளவைவிட குறைவாகவே உள்ளன என்பதை கவனிக்க வேண்டியுள்ளது. எனவே, இந்தப் பிரச்சினை முக்கியத்துவம் கொடுத்து கவனிக்கப்பட வேண்டும்” என்றார்.

ரகுராம் ராஜன், கடந்த 2013-2016 காலகட்டங்களில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவி வகித்தார். மோடியின் கடந்த ஆட்சியில் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.