இந்த நிலைக்குக் காரணம் திமுகவா பாஜகவா?

நெட்டிசன்:

பாரதி சுப்பராயன் (Bharathi Subbarayan) அவர்களது முகநூல் பதிவு:

ஓபிஎஸ்சை, சசிகலாவின் சகாப்தத்தை முடிக்க வந்த திடீர் ஹீரோவாகப் பார்க்கிறது ஒரு தரப்பு.

இதற்கெல்லாம் காரணம் திமுக தான் என்று குற்றம் சாட்டுகிறது இன்னொரு தரப்பு.

இந்தக் களேபரத்தில் நியாயமாகக் கேட்கவேண்டிய சில கேள்விகளை நாம் மறந்து விட்டோம் என்றே நினைக்கிறேன்.

சசிகலாவை பதவி ஏற்க விடாமல் மறைமுகமாக கவர்னர் தடுக்கிறார் என்பது அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய எளிமையான விஷயம். கவர்னர் திமுகவின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் வெளிப்படை. அப்படி இருக்கும் போது யாருக்கு ஆதரவாக கவர்னர் இதை செய்கிறார்?

இன்னும் புரியவில்லை என்றால் இன்னொரு கேள்வி கேட்கலாம்.

ஓபிஎஸ் இப்பொழுது பேசுவதை வைத்துப் பார்க்கும் போது அவரை முன்பிருந்தே சசிகலா தரப்புக்குப் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. சக அமைச்சர்களும் அவர் முதல்வராவதற்கு ஆதரவளித்ததாகத் தெரியவில்லை. அப்படி இருக்கும் போது யார் நிர்பந்தத்தின் பேரில் அவர் முதல்வராக்கப்பட்டார்?

இதை எல்லாம் ஏன் அவர்கள் செய்கிறார்கள் என்ற கேள்விக்கு ஆரம்ப நிலை அரசியல் பார்வையாளர்கள் கூட பதில் சொல்லி விட முடியும். தமிழகத்தின் நன்மைக்காகத்தான் இதை எல்லாம் செய்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் ஆரம்ப நிலை அரசியல் பார்வையாளர் கூட இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எனக்கு சசிகலாவின் அரசியலில் துளி கூட உடன்பாடில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் தமிழகத்தின் முதல்வராவதை அவமானமாகக் கூடக் கருதுகிறேன். ஆனால் நமது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே அவர் முதல்வராக விரும்புகிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அது பிடிக்கவில்லை என்றால் இடைத்தேர்தலில் அவரைத் தோற்கடிப்பது தான் நேர்மையான முறையே தவிர அவர் பதவி ஏற்பதையே மறைமுகமாக தடுப்பது பச்சைக் கிரிமினல்தனம் என்பது தான் எனது கருத்து.