குறைந்த பட்ச ஊதியம் தராத டில்லி தொழிலதிபர்களுக்கு சிறை

டில்லி

டில்லியின் ஆம் ஆத்மி அரசு இயற்றிய குறைந்த பட்ச ஊதியம் அளிக்காத தொழிலதிபர்களுக்கு  சிறை தண்டனை வழங்கும் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

டில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் குறைந்த பட்ச ஊதிய (டில்லி) மறுசீரமைப்பு சட்டம் 2017 என்னும் புதிய சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது.   கடந்த 2015ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்த சட்டத்தை மத்திய அரசு தெரிவித்த மாறுதல்களை சேர்த்து புதிய சட்டமாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த சட்டத்தின்படி டில்லியில் உள்ள திறன் அற்ற தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச மாத ஊதியமாக ரூ.13350.  ஓரளவு திறனுள்ள தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச மாத ஊதியமாக ரூ.14698,  முழுத் திறனுள்ள தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.16182 அளிக்கப்பட வேண்டும்.

இந்த ஊதியங்கள் மின்னணு முறையில் அல்லது காசோலை வடிவில் வழங்கப்பட வேண்டும்.  குறைந்த பட்ச ஊதியத்துக்கு குறைவாக ஊதியம் வழங்குபவர்களுக்கு குறைந்த பட்சமாக 3 வருட சிறை தண்டனை அல்லது ரூ.50,000 அபராதம் அல்லது இரண்டும் அளிக்கப்படும்.

இந்த சட்டத்துக்கு தற்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.  அதைத் தொடர்ந்து உடனடியாக இந்த சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.