ஆதரவு திரட்ட மீராகுமார் நாளை சென்னை வருகை!! தொண்டர்கள் திரள திருநாவுக்கரசர் அழைப்பு

சென்னை:

ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் நாளை மாலை சென்னையில் ஆதரவு திரட்டுகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளர் மீரா குமார் ஆதரவு திரட்டுவதற்காக நாளை (1ம் தேதி) சென்னை வருகிறார். காங்கிரஸ், தி.மு.க., முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை கோர நாளை மாலை 5 மணிக்கு சென்னை வருகிறார்.

இரவு 7 மணிக்கு திமுக எம்.எல்ஏ.க்களை சந்திக்கிறார். இரவு 8 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சிந்தித்து உடல் நலம் விசாரிக்கிறார். பின்னர் லீலா பேலஸில் காங்கிரஸ் எம்எல்ஏ.க்களை மீராகுமார் சந்திக்கிறார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த அறிக்கையில், ‘‘தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிர்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இது ஜனாதிபதி தேர்தல் என்பதை விட கொள்கையின் அடிப்படையில் நடைபெறும் தேர்தலாகவே கருதப்படுகிறது. தலித் விரோத கட்சியான பாஜ தலித் வேட்பாளரை நிறுத்தி மலிவான அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது. இந்த நிலையில் மீராகுமாருக்கு மிகப்பெரிய ஆதரவு திரண்டு வருகிறது.

இதேபோல் கடந்த காலத்தில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்ட வி.வி. கிரிக்கு மனசாட்சிப்படி வாக்களியுங்கள் என்று மறைந்த பிரதமர் இந்திரா காந்தி கோரிக்கை ஏற்கப்பட்டு அவர் வெற்றி பெற்றார். அதே ஆதரவு நிலைதான் தற்போதும் நிலவுகிறது’’ என்று நினைவு கூர்ந்துள்ளார்.

‘‘சென்னை விமானநிலையத்தில் நாளை மாலை 4.30 மணிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மீராகுமாருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள், கட்சியினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.