கோவை,
னாதிபதி பிரணாப் முகர்ஜி வருகையை யொட்டி ஊட்டியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த மாதம் ஜனாதிபதி பதவி முடிவடையும் நிலையில் அவரது ஊட்டி வருகைக்கு போலீசார் பலத்த கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று ஊட்டி வரும் ஜனாதிபதி நீலகிரி மாவட்டம் லவ்டேல் பகுதியில் உள்ள பள்ளியின் 159 ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.

இதற்காக பிரணாப் முகர்ஜி டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 12.20 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். அங்கு அவரை தமிழக கவர்னர்(பொறுப்பு) வித்யாசாகர் ராவ், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் முக்கிய அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர்.

பின்னர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி தீட்டுக்கல் பகுதிக்கு செல்கிறார். அங்கு அவரை நீலகிரி கலெக்டர் சங்கர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார். இதையடுத்து பள்ளி விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

விழா முடிந்ததும் ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் திரும்பும் அவர் மாலை 5 மணிக்கு தனி விமானம் மூலம் டில்லி செல்கிறார்.

ஜனாதிபதி வருகையை யொட்டி ஊட்டியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் தரையிறங்கும் தீட்டுக்கல் பகுதியில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.