டில்லி:

அனைத்து மதத்தினரும் இந்த நாடாளுமன்றத்தில் உள்ளனர். நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளனும் நமக்கு முக்கியத்துவம் பெற்றவர் தான். அவர்கள் மதிக்கப்பட வேண்டும் என பதவிக்காலம் முடியும் ஜனாதிபதி அவரது பிரிவுபசார விழாவில் உருக்கமாக பேசினார்.

நாடாளுமன்ற மைய வளாகத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், துணை ஜனாதிபதி அன்சாரி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா, காங்., தலைவர் சோனியா, மற்றும் எம்.பி.,க்கள் பங்கேற்றனர்.

இந்த எளிய விழாவில் ஜனாதிபதி பிரணாப் ஆற்றிய இறுதி உரையில், ‘‘ எனக்கு அளித்த பாராட்டுவிழா எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. நான் இந்த பார்லி.,யால் உருவாக்கப்பட்டேன். எனது அரசியல் பயணத்திற்கு இந்த நாடாளுமன்றம் உரு கொடுத்ததது. நான் 1969ம் ஆண்டில் ல் 34 வயதில் இந்த நாடாளுமன்றத்துக்கு தொடர்புடையவன் ஆனேன்.

இந்திரா எனது வழிகாட்டியாக இருந்தார். வாஜ்பாய், நரசிம்ம ராவ் ஆகியோர் என் மனதை ஈர்த்தனர். அத்வானி போன்ற பல்வேறு மூத்த தலைவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அத்வானி எனக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கியுள்ளார். நீண்ட கால பயணம் எனக்கு பல்வேறு படிப்பினைகள் தந்தன’’ என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘நாடாளுமன்ற ஸ்தம்பிப்பு எனக்கு பெரும் கவலை தந்தது. இது அரசையும், எதிர்கட்சியினரையும் காயப்படுத்துகிறது. நாடாளுமன்றத்தில் ஒற்றுமை அவசியம். ஜி.எஸ்.டி நிறைவேற்றம் இந்த பார்லி.,யின் சிறப்பு ஆகும்.

முக்கியமான காலக்கட்டங்களில் மட்டுமே அவசர சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அனைத்து மதத்தினரும் இந்த நாடாளுமன்றத்தில் உள்ளனர். நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்களனும் நமக்கு முக்கியத்துவம் பெற்றவர் தான். விவாதங்கள் குறைந்து வருவது கவலை அளிக்கிறது. பிரதமர் மோடியுடன் கிடைத்த நட்பும் என்றும் மறக்க முடியாததாக இருக்கும். மோடியின் திட்டங்கள், செயல்பாடு மாற்றங்களை உருவாக்குவதாக அமைகிறது’’ என்றார்.

மேலும், ‘‘ஜி.எஸ்.டி கூட்டாட்சியின் அடையாளமாக திகழ்கிறது. ஜி.எஸ்.டி நமது வளர்ச்சிக்கு துணையாக இருக்கும். இந்த நாடாளுமன்றத்தை விட்டு செல்வது எனக்கு கவலை அளிக்கிறது. இருப்பினும் மன நிறைவு பணி மகிழ்வை தரும் என்றார்.