டெல்லி:

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அதை கண்டுகொள்ளாமல் மத்தியஅரசு நிறைவேற்றி உள்ளது.

நாட்டில் உள்ள 1,482 நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள், 58 பன்முக மாநிலக் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் கீழ் கொண்டுவருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டு,  கடந்த வாரம் பிரதமர் மோடி தலைமைல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இது விளக்கம் அளித்த மத்திய அரசு,  பஞ்சாப் கூட்டுறவு வங்கி, மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் முதலீட்டாளர்கள் பல்வேறு துன்பங்களைச் சந்தித்தார்கள். அதைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், கூட்டுறவு வங்கியில் உள்ள 8.6 கோடி முதலீட்டாளர்களின் ரூ.4.84 லட்சம் கோடி பணத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால்,  இந்த அவசர சட்டத்திற்கு  தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழகஅரசின் சார்பில், கூட்டுறவுத்துறை அமைச்சர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். வங்கிகள் ஒழுங்குமுறை திருத்த சட்டம் 2020 என அழைக்கப்படும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

”நாட்டில் உள்ள 1,482 நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள், 58 பன்முக மாநிலக் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் நேரடிக் கண்காணிப்பில் கொண்டுவரும் வங்கிகள் ஒழுங்குமுறை திருத்தச் சட்டத்துக்கு(2020) ஒப்புதல் அளித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவசரச் சட்டம் பிறப்பித்தார்.

வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ல்தான் திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்தாலும் இது கூட்டுறவு வங்கிகளுக்குப் பொருந்தும்.

இந்தத் திருத்தங்கள் முதன்மை வேளாண்மைக் கடன் சொசைட்டிக்கு (பிஏசிஎஸ்) அல்லது வேளாண் தொழிலுக்கு நீண்டகாலக் கடன் அளிக்கும் கூட்டுறவு சொசைட்டிக்குப் பொருந்தாது.

இந்த அவசரச் சட்டத்தின் மூலம் முதலீட்டாளர்களின் நலன் பாதுகாக்கப்படும், கூட்டுறவு வங்கிகள் வலுப்படும். நிர்வாகம் மேம்படும், கூட்டுறவுகளின் செயல்திறன் மேம்பட்டு முதலீடும் அதிகரிக்கும்.

இந்த அவசரச் சட்டத்தால் மாநிலக் கூட்டுறவுச் சட்டத்தின் கீழ் கூட்டுறவு பதிவாளர்களுக்கு ஏற்கெனவே இருக்கும் அதிகாரம், எந்த விதத்திலும் பாதிக்காது.

வங்கியை மறுகட்டமைத்தல், முதலீட்டாளர்கள் மற்றும் வங்கி முறையை முறையாகப் பராமரித்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.