குடியரசுத்தலைவர் மாளிகை வந்தார் டிரம்ப்! ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வரவேற்பு

டெல்லி:

2நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் 2வது நாளான இன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை புரிந்தார். அவரை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தம்பதிகள், பிரதமர் மோடி உள்பட முப்படை தளபதிகள், உயர் அதிகாரிகள் வரவேற்றனர்

அதைத்தொடர்ந்து, டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோருக்கு  முப்படை வீரர்கள் அணி வகுப்பு மரியாதை செய்தனர்.

அரசுமுறைப் பயணமாக நேற்று முற்பகல் அகமதாபாத் வந்த டிரம்ப் உடன் அவரது மனைவி, மகள், மருகன் உள்பட உயர்அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர். முதல் நாளான நேற்று குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை  பார்வையிட்டனர். பின்னர்  அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்பும், மோடியும் உரையாற்றினர். அதன்பின்னர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்ரா சென்று தாஜ்மகாலை சுற்றிப் பார்த்தனர்.

பின்னர் மாலை உ.பி. மாநிலம் ஆக்ரா சென்று, தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்து, புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இரவு டெல்லி சென்று தங்கினர்.

அதையடுத்து, 2வது நாளான இன்று காலை 10.30 மணி அளவில் குடியரசுத் தலைவர் மாளிக்கு வந்த டிரம்ப் தம்பதிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவப்பு கம்பள வரவேற்பு உடன் குதிரைப்படை வீரர்கள் முன்னும் பின்னும் அணிவகுத்து வர, டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோர் காரில் ஜனாதிபதி மாளிகைக்கு வந்தனர்.

அவர்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். ஒருவரையொருவர் கைகுலுக்கியதுடன், இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து டிரம்புக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. பாதுகாப்பு அணிவகுப்பு மரியாதையை டிரம்ப் ஏற்றுக்கொண்டார்.