டெல்லி:  டெல்லி கான்ட்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் மரணம் அடைந்த   முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு,  பாரத பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, முன்னாள் குடியரசு தலைவர் தலையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து, நேற்று அவர் உயிர்பிரிந்தது. இதையடுத்து, பிரணாப் முகர்ஜியின் உடல் மருத்துவ மனையிலிருந்து இன்று காலை  அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

டெல்லி ராஜாஜி மார்க் சாலையில் இருக்கும் அவரின் இல்லத்தில், அஞ்சலி செலுத்த வைக்கப் பட்டு உள்ளது. மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, தலைமைபாதுகாப்பு அதிகாரி ஜெனரல் பிபின் ராவத், ராணுவ ஜெனரல் எம்.எம்.நரவானே, விமானப்படைத் தளபதி ஆர்.கே.எஸ். பகதூரியா, கப்பற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் ஆகியோர் வந்து மலர்கள் தூவி பிரணாப் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்பட மத்திய அமைச்சர்கள்,  அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய உயர் அதிகாரிகள், விஐபிக்கள் மலர்கள் தூவி இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று பிற்பகலுக்குப்பின் பிரணாப் முகர்ஜியின் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட உள்ளது.

பிரணாப் முகர்ஜி மறைவைத் தொடர்ந்து, ஆகஸ்டு 31ந்தேதி முதல்  செப்டம்பர் 6 வரை இந்தியா முழுவதும் ஏழு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.