சென்னை வந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: எடப்பாடி வரவேற்றார்

சென்னை:

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் சுற்றுப்பயணமாக சென்னை வந்தார். அவரை ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்பட  அமைச்சர்கள், அதிகாரிகள்  விமான நிலையம் சென்று வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் தயாராக இருந்த ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக  வேலூர் புறப்பட்டுச் சென்றார்.

குடியரசு தலைவர் வருகையை யொட்டி சென்னை மற்றும் வேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குடியரசு தலைவரின் 2 நாட்கள் பயண விவரம்:

டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று ( 4-ம் தேதி) காலை சென்னை வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஹெலிகாப்டர் மூலமாக வேலூர் செல்கிறார். அங்கு ஸ்ரீபுரம் தங்கக் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறங்குகிறார்.

அங்கிருந்து  சாலை மார்க்கமாக, சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரிக்கு செல்கிறார்.

கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். இதன்பின், வேலூர் அரசினர் விடுதியில் ஓய்வெடுக்கும் அவருக்கு அங்கு மதிய உணவு அளிக்கப்படுகிறது.

அதன்பின், வேலூரில் உள்ள ஸ்ரீநாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்துக்குச் செல்லும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சிறுநீரக மாற்று மற்றும் இருதய அறுவைச் சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஸ்ரீபுரம் தங்கக் கோயிலுக்குச் சென்று ஸ்ரீலட்சுமி நாராயணி தேவியை வழிபடுகிறார்.

வேலூரில் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு, ஹெலிகாப்டர் மூலமாக சென்னை திரும்புகிறார்.

இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் அவரை முக்கிய பிரமுகர்கள் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது. தொடரந்து நாளை (மே 5ந்தேதி) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 160-வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். அதன்பின், வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரிக்குச் சென்று அங்கு புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலையரங்கம் உள்ளிட்ட கட்டடங்களைத் திறந்து வைக்கிறார்.

அதை முடித்துக்கொண்டு  பிற்பகலில் சென்னை விமான நிலையம் செல்லும் அவர் அங்கிருந்து தனி விமானம் மூலம் டில்லி புறப்பட்டுச் செல்கிறார்.