டெல்லி: தகுதியான மகனை இந்த தேசம் இழந்துவிட்டதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84. ஆகஸ்டு 10ம் தேதி டில்லி ராணுவ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட முகர்ஜி, கோமா நிலைக்கு சென்றார்.

ஆழ்ந்த கோமா நிலையில், இன்று மாலை அவர் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது:

முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீ பிரணாப் முகர்ஜி இல்லை என்பதை கேட்க வருத்தமாக உள்ளது. அவரது மறைவு ஒரு சகாப்தத்தை கடந்து செல்கிறது. பொது வாழ்க்கையில் ஒரு மகத்தான மனிதர் அவர். அன்னை இந்தியாவுக்கு சேவை செய்தவர். இந்த தேசம் தனது தகுதியான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் இரங்கல் என்று குறிப்பிட்டு உள்ளார்.

மறைந்த பிரணாப் முகர்ஜிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பாரத ரத்னா, பத்ம விபூஷண் விருதுகளை பெற்றவர் பிரணாப். 2012 முதல் 2017 வரை ஜனாதிபதி பதவி வகித்தவர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய பிரணாப் முகர்ஜி, 1982- 84ல 2009-12, ஆண்டுகளில் நிதி அமைச்சர், 2004- 06 வரை பாதுகாப்பு அமைச்சர், 2006-09, 1995-96 ஆண்டுகளில் வெளியுறவு அமைச்சர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார். 1980 முதல் 1985 ராஜ்யசபா தலைவராகவும் இருந்துள்ளார்.