டெல்லி: கொரோனா தொற்றானது சரியான நேரத்தில், சரியான முறையில் கட்டுப்படுத்தப்பட்டதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த கூறி உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 25 லட்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந் நிலையில் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடையே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்து போராடுவதில் நாட்டின் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை. நெருக்கடிகளை முன்கூட்டியே தடுத்து, சரியான நேரத்தில் மத்திய அரசு சரியான முடிவுகளை எடுத்தது.

அரசின் இந்த முடிவுகள் சவாலை எதிர்கொள்ள உதவியது. மக்களின் ஒத்துழைப்பு சிறப்பானது. இந்த சந்தர்ப்பத்தில், போராளிகளின் தியாகங்களை நன்றியுடன் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களின் தியாகத்தின் இன்று சுதந்திர நாட்டில் வசித்து வருகிறோம்.

மகாத்மா காந்தி நமது சுதந்திர இயக்கத்தின் வழிகாட்டி. அது நமது  அதிர்ஷ்டம். துறவி, அரசியல்வாதி இரண்டுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு அவரின் ஆளுமையில் தென்பட்டது. இந்த ஆண்டு, சுதந்திர தின விழா வழக்கமானதாக இல்லை. அதற்கான காரணங்கள் வெளிப்படையான ஒன்று.

உலகமே கொடிய வைரஸில் சிக்கி உயிர்பலிகளை சந்தித்து வருகிறது.இந்த சவாலை எதிர்கொண்டு, மத்திய அரசானது, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை மேற்கொண்டது. அதன் மூலம் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. அரசின் முடிவுகள் சவாலை எதிர்கொள்ள உதவியது.

அனைத்து மாநில அரசுகளும் சிறப்பாக செயல்பட்டன. பொதுமக்களும் முழு ஆதரவையும் அளித்தனர். இந்த முயற்சிகளால்,  தொற்றுநோயை நாம் கட்டுப்படுத்தினோம் என்று தமது உரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.