காஞ்சிபுரம்:

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் இன்று காலை மூச்சுத்திணறல் காரணமாக காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை காலை நடைபெற உள்ளது.

இந்நிலையில் மறைந்த சங்கராச்சாரியாருக்கு ஆன்மிக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

சங்கர மடத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரர் உடலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறுதி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஜெயேந்திரர் மறைவு குறித்து கேள்விப்பட்டு மனவேதனை அடைந்ததாகவும்,  உயரிய ஆன்மீக தலைவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியை நாடு இழந்துவிட்டதாகவும், அவரது சீடர்களுக்கும் அவரது போதனைகளை பின்பற்றுவோருக்கும் தனது இரங்கலை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாளை நடைபெற உள்ள ஜெயேந்திரரின் இறுதிச்சடங்குக்கு  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பா.ஜனதா மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி மற்றும் மத்திய மாநில அமைச்சர்கள் வர உள்ளதாகவும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.