சென்னை:

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக வரும் வெள்ளிக்கிழமை தமிழகம் வருகிறார். சென்னை கல்லூரி நிகழ்ச்சி மற்றும் ஆன்மிக பயணமாக குடியரசு தலைவர் தமிழகம் வருகிறார்.

4-ந் தேதி தமிழகம் வரும் கோவிந்த்,  சென்னை, வேலுாரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அவரது வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தனி விமானம் மூலம் 4ந்தேதி சென்னை வரும் ராம்நாத் கோவிந்த். டில்லியில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு 10.45க்கு சென்னை வந்தடைகிறார்.

விமானநிலையத்தில் ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், முப்படை அதிகாரிகள் அவரை வரவேற்கின்றனர். அதையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்கிறார்.  அங்கு மதியம் 2.30 மணி அளவில் நடைபெறும்  சி.எம்.சி. மருத்துவ கல்லுாரி நுாற்றாண்டு கொண்டாட்ட தொடக்க விழாவில் பங்கேற்கிறார்.

அதைத்தொடர்ந்து மாலை  3 மணிக்கு ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கிட்னி மாற்று மற்றும் ஆராயச்சி மையத் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். பின்னர்,  மாலை 4மணிக்கு ஸ்ரீ லெட்சுமி நாராயணி தங்க கோயிலுக்கு செல்கிறார்.

அதையடுத்து, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்பும் அவர் இரவு  7.30 மணி அளிவில் முக்கிய பிரமுகர்கள், அரசியல்கட்சி தலைவர்களை சந்திக்க இருக்கிறார்.

மறுநாள் 5-ம் தேதி காலை 9.30 மணிக்கு மீண்டும் முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் ராம்நாத், காலை  10.30 மணிக்கு சென்னை பல்கலைக்கழக 160-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். அதை முடித்துக்கொண்டு பகல் 12 மணி அளவில் வேளச்சேரி குருநானக் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

பின்னர்.  மதியம் 1.25 மணிக்கு தனி விமானத்தில் டில்லி புறப்படுகிறார்.