ஜனாதிபதி இன்று சென்னை வருகை

சென்னை,

னாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வருகிறார். தாம்பரம் விமானப்படை தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

ஜனாதிபதி  சென்னை வருவதையொட்டி சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை வரும் ஜனாதிபதியை தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் மற்றும் தமிழக முதல்வர், அமைச்சர்கள் வரவேற்கிறார்கள்.

தனி விமானம் மூலம் இன்று இரவு சென்னை வரும் பிரணாப் முகர்ஜி, இரவு கவர்னர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார்.

நாளை சென்னை அடையாரில் நடைபெறும் இந்திய பெண்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்.

அதையடுத்து, தாம்பரத்தில் நடைபெற இருக்கும் விமானப்படை விழாவில் கலந்துகொள்கிறார்.  இதையொட்டி சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இதையொட்டி சென்னையில் ஜனாதிபதி பயணம் செய்ய உள்ள இடங்கள், பாதைகளில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் இருந்து கவர்னர் மாளிகை, அங்கிருந்து தாம்பரம் விமானப்படை தளம், அங்கிருந்து அடையாறு, அங்கிருந்து மீண்டும் சென்னை விமான நிலையத்துக்கு என ஜனாதிபதியின் மாதிரி கார் ஒன்றை ஓட்டிச்சென்று அவருக்கு எவ்வாறு பாதுகாப்பு அளிப்பது என்பது குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது.