டில்லி,

தூக்கு தண்டனை கைதியின் கருணை மனுவை நிராகரித்த  ஜனாதிபதியின் உத்தரவை நிராகரித்து தீர்ப்பு வழங்கி உள்ளது  டில்லி ஐகோர்ட்டு. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்திருந்தார். அது தொடர்பான வழக்கு ஒன்றில், ஜனாதிபதியின் காலமாதமான பரிசீலனையை தொடர்ந்து டில்லி ஐகோர்ட்டு  இந்த பரபரப்பான தீர்ப்பை வழங்கி உள்ளது.

புதுடில்லி: தூக்கு தண்டனை கைதியின் கருணை மனுவை நிராகரித்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை, டில்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக மாற்றியுள்ளது.

சோனு சந்ததார் என்ற கொள்ளைக்காரன் 2004ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம், சேர் என்ற கிராமத்தில்  கொள்ளையடிக்க சென்றபோது ஒரே குடும்பத்தை சேர்ந்த  ஐந்து பேரை கொடூரமாக கொன்றான்.

இதுகுறித்த விசாரணையில் அவனுக்க 2008ம் ஆண்டு கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியிருந்தது. இந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்திருந்தது.

இதையடுத்து, சோனு ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியிருந்தான்.

சோனுவின் கருணை மனுவை  சத்தீஸ்கர் மாநில அரசும், ஜனாதிபதியும் 2014ம் ஆண்டு நிராகரித்தனர். மேலும் சுப்ரீம் கோர்ட்டும் அவனது சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், இதுகுறித்து சோனு டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தான். இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்டானி மற்றும் வினோத் கோயல் ஆகியோர் அடங்கிய டிவிஷன் சோனுவின் தூக்கு தண்டனையை ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.

இதுகுறித்த விசாரணையின்போது நீதிபதிகள்,  சத்தீஸ்கர் மாநில அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில் பல முரண்பாடுகள் உள்ளன. சோனு சந்தர் ஐந்து ஆண்டுகள் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது அடிப்படை உரிமைகளை மீறும் செயல். அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான இந்த நீதிமன்றம் இவ்விவகாரத்தில் தலையிட்டு, மனுதாரருக்கு நிவாரணம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, சோனுவின் தண்டனையை உறுதி செய்த  கவர்னர் மற்றும் ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

மனுதாரருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்படுகிறது. எனினும், ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பதையே குறிப்பிடும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

டில்லி ஐகோர்ட்டின் இந்த அதிரடியான பரபரப்பு தீர்ப்பு காரணமாக சட்டச்சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சட்ட வல்லுனர்கள் கூறி உள்ளனர்.

இந்த தீர்ப்பு காரணமாக ஜனாதிபதிக்கும், மத்திய உள்துறை அமைச்சககத்துக்கும் தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதியின் உத்தரவுக்கே தடை விதித்து நீதிபதிகள் கூறியிருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.