குடியரசு தலைவரின் பத்திரிகை செயலரிடம் கிரெடிட் கார்ட்  மோசடி

டில்லி

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பத்திரிகை செயலர் அசோக் மாலிக் இடம் இருந்து கிரெடிட் கார்ட் மூலம் ரூ. 1.38 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடன் அவரது பத்திரிகை செயலர் அசோக் மாலிக் வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தார். நவம்பர் 22 ஆம் தேதி அவர்கள் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் இருந்த போது அசோக் மாலிக்குக்கு ஒரு எஸ் எம் ஏஸ் செய்தி வந்துள்ளது. அதில் அவருடைய கிரெடிட் கார்ட் மூலம் ஐக்கிய அமீரகத்தில் ரூ.1.38 லட்சத்துக்கு பொருட்கள் வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலியாவில் இருந்த அசோக் அதிர்ந்து போனார். அவர் அதனால் இணையம் மூலம் ஆய்வு செய்ததில் அந்த பொருட்கள் அமிரகத்தை சேர்ந்த ஒரு தளத்தில் வாங்கப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக அவர் அந்த கிரெடிட் கார்ட் வழங்கிய வங்கியின் கால் செண்டரை அழைத்து புகார் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது கிரெடிட் கார்டையும் முடக்கி வைத்துள்ளார்.

டில்லி திரும்பியதும் அசோக் மல்லிக் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே தனது புகார் நகலை அவர் டில்லி நகர காவல்துறை ஆணையருக்கு ஈ மெயில் மூலம் அனுப்பி வைத்துள்ளார். இது குறித்து காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு விசாரித்து வருகிறது.