இன்று நள்ளிரவு முதல் காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம்!

ஜம்மு-காஷ்மீரில் இன்று நள்ளிரவு முதல் ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தும் உத்தரவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கையொப்பமிட்டுள்ளார். இன்று நள்ளிரவு முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற உள்ளது.

ramnath

2015ம் ஆண்டு காஷ்மீரில் 87 இடங்களுக்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களையும், பா.ஜ.க. 25 இடங்களையும், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 12 இடங்களையும், பிறக் கட்சிகள் 6 இடங்களையும் பிடித்தன.

எனினும் ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. பிடிபி என்றழைக்கப்படும் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் முப்தி முகம்மது சயீத் முதல்வராகவும், பா.ஜ.க. தரப்பில் நிர்மல் சிங் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.

ஆனால் சிறிது காலத்திலேயே முப்தி முகம்மது சயீத் மறைந்ததால் அவரது மகள் மெகபூபா முப்தி தலைமையில் மீண்டும் பிடிபி- பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. கூட்டணி கட்சிகளுக்கிடையே கருத்து மோதல் இருந்ததன் கராணமாக கடந்த ஜூன் மாதம் முப்தி தலைமையிலான அரசில் இருந்து விலகுவதாக பாஜக அறிவித்தது.

இதனை தொடர்ந்து தனது முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. சட்டசபையும் கலைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றுடன் ஆறுமாத கால ஜனாதிபதி ஆட்சி காஷ்மீரில் முடிவடிகிறது. இது குறித்து நேற்று நடைபெற்ற பிரதமர்மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்பொது காஷ்மீரில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி அட்சியை அமுல்படுத்த மத்திய அரசு பரிந்துரித்தது.

மத்திய அரசின் கோரிக்கையை ஏற்ற குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்தும் பிரகடனத்தில் இன்று மாலை கையொப்பமிட்டார். இன்று நள்ளிரவு முதல் ஆறு மாதங்களுக்கு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற உள்ளது.