புதுடெல்லி:
நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தை காணொலியில் கூட நடத்த முடியாது என மக்களவை, மாநிலங்களவை அதிகாரிகள் கூறியிருப்பது வேதனையாக இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், செய்தித்தொடர்பாளர் சக்திசிங் கோகில் இருவரும் நேற்று கூட்டாக நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது ப.சிதம்பரம் கூறியதாவது:

நாடாளுமன்றநிலைக்குழுக் கூட்டம் காணொலியில்கூட நடத்தப்படாது என மக்களவை, மாநிலங்களவை தலைமை அதிகாரிகள் கூறியிருப்பது வேதனையளிக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இரு அவைகளின் நிலைக்குழுக் கூட்டத்தைக் கூட்டி பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு அழுத்தம் கொடுக்க அதிகாரிகள்தான் உதவ வேண்டும். ஆனால், அவர்களே காணொலி மூலம் கூட்டம் இல்லை எனக் கூறுவது மிகுந்த வேதனையாக இருக்கிறது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலக நாடுகளி்ல் எல்லாம் நாடாளுமன்றம் இயங்குகிறது. நம்முடைய நாடாளுமன்றமும் இதுபோன்ற இக்கட்டான சூழலில், நிலையில் கூடி விவாதிக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்றம் இயங்காவிட்டாலும், குறைந்தபட்சம் நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தையாவது காணொலி மூலம் கூட்ட வேண்டும்.

அப்படி என்ன மிகப்பெரிய ரகசியம் இருக்கிறது. ஒவ்வொரு நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் முடிந்தபின்பும், மறுநாள் என்ன விதமான ரகசியம் ஆலோசிக்கப்பட்டது என்று நாளேடுகள் செய்தி வெளியிடும்.

ஆனால், கொரோனா பெருந்தொற்று காலத்தில் என்ன ரகசியத்தை ஆலோசிக்க முடியும். பாதுகாப்பு தொடர்பான ரகசியங்களை ஆலோசிக்கப்போவதில்லை, அணுஆயுத ரகசியங்களை விவாதிக்கவில்லை, ராணுவம் தயாராக இருப்பது குறித்து விவாதிக்கப் போவதில்லை. உள்நாட்டு பாதுகாப்புக் குறி்த்துக்கூட பேசப்போவதில்லை. இப்போது என்ன சூழல் இருக்கிறதோ அதைப்பற்றித்தான் பேசப்போகிறோம்.

நாடாளுமன்ற தலைைம அதிகாரிகள் முதலில் பாதுகாப்பு மற்றும் ராணுவத் தயாரிப்பு, கொரோனா பெருந்தொற்று சூழல் ஆகியவற்றுக்கான வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். பெருந்தொற்று தொடர்பாக நிலைக்குழு வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். நாடாளுமன்றத்தை கூட்ட முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் நிலைக்குழுக் கூட்டம் நடத்த அனுமதிக்கலாம்

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.