முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டே, “வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்கள் கருப்பு பணத்தை அரசு மீட்டு வர வேண்டும், அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெறுவதையும் தடை செய்ய வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த எட்டாம் தேதி நள்ளிரவு முதல், நாட்டில் உள்ள 1000, 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹெக்டே  கூறியுள்ளதாவது:
0
“மத்தியஅரசு 1000, 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்து வரவேற்கத்தக்க செயலாகும்.  இதன் மூலம் கருப்பு பண புழக்கம் குறையும். இந்த நடவடிக்கையால், மக்களுக்கு சிறிய அளவுக்கு, சில நாட்கள் மட்டுமே பாதிப்பு ஏற்படும்.
அதே நேரம்,அரசிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், மத்திய அரசு, இன்னும் முயற்சி எடுத்து, வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியிருக்கும் கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டும். இதுதான் பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதியாகவும் இருந்தது.
அதே போல அரசியல் கட்சிகள் வசூலிக்கும் நன்கொடைகள் வசூல் செய்வதிலும் கட்டுப்பாடு வேண்டும். கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பவர்களின் பான் எண் அல்லது ஆதார் எண்ணையும் குறிப்பிடுவதை க்டாயமாக்க வேண்டும்.
அதன்மூலம் வருமான வரித்துறை மூலம் ஆய்வு செய்து, குறிப்பிட்ட நபர் நன்கொடை கொடுத்தது, நியாயமான வருமானத்தில்தானா என்பதை உறுதி செய்யலாம்.  இந்த நடவடிக்கைகள் மூலம் கருப்புப்பணத்தை தடை செய்ய முடியும்” என்று சந்தோஷ் ஹெக்டே தெரிவித்துள்ளார்.