சேலம்:

போராட்டத்தின்போது, போராட்டக்காரர்கள் ரெயிலின் கூரை மீது ஏற முடியாதவாறு தடுப்புகள் ஏற்படுத்தப்படும் என்று  தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்சேஷ்த்ரா கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, பாமக நடத்திய போராட்டத்தன்போது,  திண்டிவனத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில், ரெயில்மீது ஏறி போராட்டம் நடத்திய பாமக நிர்வாகி,  மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், ரெயில்பாதையை ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்சேஷ்த்ரா, இனி வரும் காலங்களில் போராட்டக்குழுவினர் ரயில் கூரை மீது ஏற முடியாதவாறு பாதுகாப்பு பணிகள் ஏற்படுத்தப்படும் என்றும், அதற்கான தடுப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறினார்.

போராட்டத்தில் ஈடுபடுவர்கள் ரயிலை மறித்தோ அல்லது ரயிலின் மீது ஏறியோ போராட்டம் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

ஜோலார்பேட்டையில் தொடங்கி ஈரோடு வரையிலான ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்களில் ஆய்வு செய்த அவர், சேலத்தில் ரெயில் பயணிகளின் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரெயில் மேற்கூரை மீது ஏறி போராட்டம் நடத்திய இளைஞர் யோகேஷ் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி இறந்தது குறிப்பிடத்தக்கது.