தமிழ்நாட்டில் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ள காரணத்தால், மீன்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.

மீன்பிடி தடை காலம் கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விசை படகுகள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பைபர் மற்றும் கட்டுமரங்கள் மட்டுமே கடலுக்குள் சிறிது தூரம் சென்று மீன் பிடித்து வருகின்றன. எனவே வஞ்சிரம், இறால், வவ்வால் போன்ற உயர் ரக மீன்கள் கிடைப்பதில்லை. சங்கரா, நவரை, கவளை போன்ற சிறிய ரக மீன்களே பிடிக்கப்படுகின்றன. அதுவும் மிக குறைந்த அளவே கிடைக்கின்றன.

இதனால் மீன்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட விசை படகுகளிலும், 600-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளிலும் 300-க்கும் அதிகமான கட்டு மரங்களிலும் மீனவர்கள் மீன் பிடித்து வந்தனர்.

இதில் விசை படகுகள் நிறுத்தப்பட்டதாலும் மற்ற படகுகளில் வரும் மீன்வரத்து குறைந்ததாலும் காசிமேடு மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. முன்பு கிலோ ரூ.1000 வரை விற்கப்பட்ட பெரிய ரக வஞ்சிரம் மீன் தற்போது ரூ.1,600 வரை விற்கப்படுகிறது. சின்ன வஞ்சிரம் மீன் ரூ.600-ல் இருந்து ரூ. 750 ஆக உயர்ந்துள்ளது. வவ்வால் ரூ.500-ல் இருந்து ரூ.800ஆகவும், கடமா ரூ.300-ல் இருந்து ரூ.450 ஆகவும், கொடுவா ரூ.100-ல் இருந்து ரூ.200 ஆகவும், ரூ.300-ல் இருந்து ரூ.500 ஆகவும், நவரை ரூ.200-ல் இருந்து ரூ.350 ஆகவும், சங்கரா ரூ.250-ல் இருந்து ரூ.450-ஆகவும், கவளை ரூ.150-ல் இருந்து ரூ.200 ஆகவும் அதிகரித்துள்ளது. இதனால் சிறிய வியாபாரிகளும், பொதுமக்களும் மீன் வாங்குவதை குறைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மீன்பிடி தடை காலம் உள்ளதால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் வருகின்றன. சீசன் காலங்களில் 40 முதல் 50 லாரிகள் வரும். தற்போது 12 முதல் 22 லாரிகள் வரைதான் மீன்கள் வருகின்றன.