ரேஷன் அட்டைதாரர்களுக்கு நவம்பர் மாதம் வரை விலையில்லா அரிசி வழங்கப்படும் – முதல்வர்

திண்டுக்கல்:

மிழகத்தில் ரேஷன் அட்டைதார்களுக்கு நவம்பர் மாதம் வரை விலையில்லா கூடுதல் அரிசி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.8.69 கோடியில் வருவாய், ஊரக வளர்ச்சி, தோட்டக்கலை, கால்நடைத் துறை என 42 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.2.96 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கி, முன்னதாக கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டு வருகிறது.கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றினாலே போதுமானது.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவாகவும், மீட்பு விகிதம் அதிகமாகவும் உள்ளது என்றார். பின்னர் திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சி குறித்து பேசிய அவர், திண்டுக்கல்லில் தொழில் நிறுவனங்கள் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளன, நூற்பாலைகள் அதிகம் இருப்பதால் வேலைவாய்ப்பு பெருகியுள்ளது.

கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் மாவட்டத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் பல தடுப்பணைகள் கட்டும் திட்டம் உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிதியுதவி, தொடர்ந்து 3 மாதம் விலையில்லா ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டது. தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை விலையில்லா கூடுதல் அரிசி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.