புதுடெல்லி: இந்திய மருந்து விலை ஒழுங்குமுறை அமைப்பு, புற்றுநோய்க்கான 9 மருந்துகளின் லாப அளவீட்டைக் குறைத்துள்ளதோடு, 5 மருந்துகளின் சில்லறை விலையை 30% முதல் 60% வரை குறைத்துள்ளது.

எர்லோடினிப், பெம்எக்ஸல், எபோக்லர், லியோபிரோகன் டிபோட் மற்றும் லனோலிமஸ் போன்றவை, விலை குறைப்பு செய்யப்பட்ட புற்றுநோய் மருந்துகளில் சில.

உதாரணமாக, நுரையீரல் புற்றுநோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் பெம்எக்ஸல் மருந்தின் விலை ரூ.22,000 என்பதிலிருந்து ரூ.2800 என்பதாக குறைந்துள்ளது. 100 மில்லிகிராம் டோஸேஜ் கொண்ட அதே மருந்தின் ஒரு ஊசியின் விலை ரூ.7700 என்பதிலிருந்து, ரூ.800 ஆக குறைந்துள்ளது.

புற்றுநோய் மருந்துகளின் விலை குறைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த பிப்ரவரியில், 380 பிராண்டுகளை உள்ளடக்கிய 42 புற்றுநோய் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டது.