தமிழக சிறைகளில் தயாரிக்கப்படும் முக கவசங்கள் விலை பாதியாகக் குறைப்பு

சென்னை

மிழக மத்திய சிறைகளில் தயாரிக்கப்படும் முக கவசங்கள் விலை ரூ.10லிருந்து ரூ.5 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்தியாவில் அதிக பாதிப்பு உள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  கொரோனா தொற்றைத் தடுக்க முகக் கவசம் அவசியமாக்கப்பட்டுள்ளது.   எனவே மக்கள் கொரோனா தாக்கத்திலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள முகக் கவசம் அணிந்து வருவதால் தேவை அதிகரித்துள்ளது.

இதையொட்டி தமிழக அரசு மக்களுக்குக் குறைந்த விலையில் முகக் கவசம் கிடைக்கப் புழல், வேலூர், கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை, மதுரை, கோவை உள்ளிட்ட ஊர்களில் உள்ள மத்தியச் சிறைகளில் உள்ள கைதிகள் மூலம் கவசம் தயாரிக்கத் தொடங்கியது. இந்த முகக் கவசங்கள் ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அதன் விலை ரூ.5 எனப் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சிறைத்துறை தலைமை டி ஐ ஜி முருகேசன், “தற்போது 4,29,654 முகக் கவசங்கள் கையிருப்பில் உள்ளன.  அவற்றில் புழலில் 50075, வேலூரில் 15130, கடலூரில் 24500, திருச்சியில் 51100. மதுரையில் 58600, பாளையங்கோட்டையில் 34750, கோவையில்1,95,499 என உள்ளன.

மக்களின் நலன் கருதி முகக் கவச விலையைப் பாதியாகக் குறைத்துள்ளோம்.  கவசம் தேவைப்படும் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், தொழிலகங்கள், தனிப்பட்டோர் உள்ளிட்ட அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள சிறை நிர்வாகத்திடம் இருந்து தேவையான முகக் கவசங்களை வாங்கிக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு புழல் சிறை 044-26590615, வேலூர் சிறை 0416 – 2233472, கடலூர் சிறை 04142 – 235027, திருச்சி சிறை 0431 – 2333213, மதுரை சிறை 0452 – 2360301, பாளையங்கோட்டை சிறை 0462 – 2531845, கோவை சிறை 0422 – 2303062 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.