பாலியல் புகாரில் சிக்கிய பேராயர் 3 நாள் விசாரணைக்கு பிறகு கைது

கேரள கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகாரில் 3 நாட்கள் விசாரணைக்குப் பிறகு பேராயர் பிராங்கோ கைது செய்யப்பட்டார். பேராயர் பிராங்கோவிடம் விசாரணை நடத்தியதில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

bishop

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பேராயராக பணியாற்றி வரும் பிராங்கோ மூலக்கல் மீது கேரளா கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். இது நாடு முழுவதும் மிகப்பெரிய பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை கேரளா மாநிலம் கோட்டயம் அருகே குருவிளங்காடு பகுதியில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றி வந்தவர் பாதிரியார் பிராங்கோ மூலக்கல். இவர் தான் பணியாற்றிய காலத்தில் கன்னியாஸ்திரி ஒருவரை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி அப்போது தேவாலய நிர்வாகிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி குருவிளங்காடு போலீஸில் புகார் செய்தார். குற்றச்சாட்டுக்கு ஆளான பாதிரியார் பிராங்கோ மூலக்கல் கன்னியாஸ்திரி கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, பொய்யானது என்று மறுத்து வந்தார்.

இந்நிலையில், பேராயர் பிராங்கோவால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக 114 பக்க அளவில் வாக்குமூலம் அளிக்கப்பட்டது. ஆனால், புகார் அளித்து 70 நாட்கள் ஆகியும் பேராயர் கைது செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டி கன்னியாஸ்திரிகள் 5 பேர் கடந்த 14 நாட்களாகப் போராட்டம் நடத்தினார்கள்.

இதையடுத்து, கோட்டயம் போலீசார் எஸ்.பி.ஹரிசங்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகக் கோரி பேராயர் பிராங்கோவுக்கு கேரளப் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து, தனது பேராயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணைக்கு பிராங்கோ ஆஜரானார். கடந்த 3 நாட்களாக பேராயர் மீது நடத்த விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது.

அதன்பிறகு கோட்டயம் எஸ்.பி.ஹரிசங்கர் பேராயர் பிராங்கோவைக் கைது செய்வதாக அறிவித்தனர். பேராயர் மூலக்கலை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே பேராயர் பிராங்கோ கைது தொடர்பாக கன்னியாஸ்திரிகளிடம் கேட்டபோது, ” பேராயர் பிராங்கோ கைது செய்யப்பட்ட செய்தியை எங்களால் நம்ப முடியவில்லை. நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்த மகிழ்ச்சிக்குக் காரணம் மக்களும், ஊடகங்களும் அளித்த ஆதரவுதான் “ என்று தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், ” பேராயர் பிராங்கோவிடம் விசாரணை நடத்தியதில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரங்கள் இருப்பது தெரிந்தது. இந்த விவகாரத்தில் அவரைக் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை, அதனால் கைது செய்யப்பட்டார். இந்திய வரலாற்றிலேயே பேராயர் ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்படுவது இது முதல் முறையாகும் “ எனத் தெரிவித்தனர்.