ஷீனாபோரா கொலை விவகாரம்….இந்திராணியிடம் விவகாரத்து பெற பீட்டர் முகர்ஜி சம்மதம்

மும்பை:

ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது தாய் தனது காதல் கணவரான பீட்டர் முகர்ஜியிடம் இருந்து விவகாரத்து பெறவுள்ளார்.

அசாம் மாநிலம் குவாஹாட் டியை பூர்வீகமாக கொண்டவர் இந்திராணி. இளம்வயதில் திருமணம் ஆகாமலேயே அவர் 2 குழந்தைகளுக்கு தாயானார். அதில் மூத்த பெண் ஷீனா போரா. 2வது மகன் மிகைல் போரா. அதன்பின்னர் கொல்கத்தா வைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சீவ் கண்ணாவை இந்திராணி திருமணம் செய்தார். அவர்களுக்கு வித்தி என்ற பெண் உள்ளார். பின்னர் சஞ்சீவ் கண்ணாவிடம் இருந்து பிரிந்த இந்திராணி பிரபல தனியார் தொலைக்காட்சியின் தலைமை செயல் இயக்குநராக இருந்த பீட்டர் முகர்ஜியை 2002-ல் திருமணம் செய்தார்.

இருவரும் இணைந்து 1996-ல் தனியாக ஊடக நிறுவனத்தை தொடங்கினர். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் 50 முன்னணி பெண் தொழிலதிபர்களில் ஒருவராக இந்திராணி உருவெடுத்தார். பீட்டர் முகர்ஜியை திருமணம் செய்தபோது தனது முதல் இரண்டு குழந்தைகள் ஷீனா போரா, மிகைல் போரா ஆகியோரை தன்னுடன் பிறந்த சகோதர, சகோதரி என்று அறிமுகம் செய்துள்ளார். இதனிடையே பீட்டர் முகர்ஜியின் மகன் ராகுல் முகர்ஜியும் ஷீனா போராவும் காதலித்துள்ளனர். இதனை இந்திராணியும் குடும்பத்தினரும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

கடந்த 2012 ஏப்ரலில் ஷீனா போரா திடீரென மாயமானார். ஆனால் அவர் அமெரிக்காவில் குடியேறிவிட்டதாக குடும்பத்தினரிடமும் உறவினர்களிடமும் இந்திராணி தெரிவித்துள்ளார். ஆனால், ஷீனா போராவை அவரது தாயார் இந்திராணி கொலை செய்து எரித்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்திராணி, சஞ்சீவ் கண்ணா, கார் டிரைர் ஷியாம்வர் ராய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கில் பீட்டர் முகர்ஜியும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் பீட்டர் முகர்ஜிக்கு இந்திராணி விவகாரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதை ஏற்றுக் கொண்ட பீட்டர் விவகாரத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் பந்த்ரா குடும்ப நல நீதிமன்றத்தில் முறைப்படி விவகாரத்து பெறவுள்ளனர்.