குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க மோடி தனி அமைச்சகத்தை ஏற்படுத்துவார்: சரத்குமார்

சென்னை:

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்,  நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க பிரதமர் மோடி புதிய தனி அமைச்சகத்தை உருவாக்குவார் என்று சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் கூறினார்.

17வது மக்களவைக்கான தேர்தல் முடிவடைந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கிடையில் எக்சிட் போல் வாக்குகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், பாஜக தனது கூட்டணி கட்சித்தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து விருந்து அளித்தது. முன்னதாக கூட்டணி கட்சியினருடன் பாஜக தலைவர் அமித்ஷா, மோடி உள்பட மூத்த தலைவர்கள் ஆலோசனை நடைபெற்றது. அதில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கூட்டணி கட்சியின ருக்கு அமைச்சரவையில் இடம்ஒதுக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விருந்தில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, பாமக, தேமுதிக, இந்திய குடியரசு கட்சி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், கருத்துக்கணிப்புகளைத் தாண்டி தமிழகத்தில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், நாட்டில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மத்தியில் தனி அமைச்சகம் உருவாக்க பிரதமர் திட்டம் வைத்திருப்பதாகவும் கூறினார்.